வீடு புகுந்து பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்த கட்டிட தொழிலாளி கைது


வீடு புகுந்து பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்த கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 Jan 2022 12:17 AM IST (Updated: 13 Jan 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவத்தில் மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவத்தில் மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நகை பறிப்பு

ராமநாதபுரம் வல்லபை நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் விஜய். வெளிநாட்டில் கப்பலில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா (வயது 29). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு சுகன்யா வீட்டின் வராண்டா பகுதியில் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். 
அப்போது தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வராண்டாவில் விளக்கு அணைந்திருந்ததை கண்டு காரணம் புரியாமல் பார்த்துள்ளார். இருளில் அங்கிருந்த வெளிப்பட்ட மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி சுகன்யா அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். செய்வதறியாது திகைத்த சுகன்யா கத்தி கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அதற்குள் மர்ம நபர் ஓடிவிட்டார். 

போலீசில் புகார்

இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் இனஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன், போலீசார் கஜேந்திரன், சுரேஷ் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தபோது சுகன்யா மர்ம நபர் அணிந்திருந்த உடைகளின் நிறம் குறித்து கூறியுள்ளார். 
அதன் அடிப்படையில் அருகில் விசாரித்தபோது அருகில் உள்ள வீட்டில் நடைபெற்ற கட்டிட பணியின்போது தொழிலாளியாக வேலைக்கு வந்த நபர் இதுபோன்ற உடை அணிந்திருப்பதை பார்த்ததாக தெரிவித்தனர்.
ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த நபர் வேலை முடிந்து சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. இதனால் அந்த மர்ம நபர்தான் மேற்படி வீட்டில் இவர்களை தவிர யாரும் இல்லை என்பதை நோட்டம் பார்த்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதி அவர் குறித்த விவரங்களை சேகரித்தனர். 

மதுரையை சேர்ந்தவர்

இந்த விசாரணையில் அவர் மதுரை புதுப்பட்டி பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் மகன் தினகரன் என்ற கணேசன் (21) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரித்தபோது சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். 
அவரிடம் இருந்து 9 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார் தினகரன் என்ற கணேசனை கைது செய்தனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் திறமையாக துப்பு துலங்கி குற்றவாளியை கைது செய்து முழுமையான நகையை பறிமுதல் செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.

Next Story