‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம் லால்குடி ரெயில் நிலையத்தில் சென்னை நோக்கி செல்லும் வழித்தடத்தில் (3-வது நடைமேடை) தினமும் பல்லவன் மற்றும் மலைக்கோட்டை விரைவு ரெயில்கள் நின்று செல்கின்றன. ஆனால் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தற்போது ரெயில் நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசைத்தம்பி, லால்குடி, திருச்சி.
பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் உள்ள கழிவுநீர் வடிகால் மேல்தளம் இடிந்து விழுந்து உள்ளது. மேலும், பஸ்கள் திரும்பும் இடத்தில் ராட்சத பள்ளம் உள்ளதால் டிரைவர்கள் பஸ்சை திருப்ப முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். இதேபோல் இங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க வருபவர்கள் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அபாயகரமான பள்ளத்தை மூடுவதுடன், கழிவுநீர் வடிகால் வாய்க்காலின் மேல்தளத்தை சீரமைக்க வேண்டும்.
பிரியா, காட்டுப்புத்தூர், திருச்சி.
தார்சாலை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் மணிகண்டம் மேக்குடி கிராமம் ஆலம்பட்டி முதல் நடுபட்டி வரை தார் சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு எந்த பணியும் நடைபெற வில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, மணிகண்டம், திருச்சி.
குடிநீருக்காக ஏங்கும் மக்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா பூனாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் கடந்த ஒரு ஆண்டாக தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணிக்கம், மண்ணச்சநல்லூர், திருச்சி.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா முத்தரசநல்லூர் பஞ்சாயத்து முத்தமிழ்புரம் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த சில வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவாஜி, ஸ்ரீரங்கம், திருச்சி.
Related Tags :
Next Story