மாநில அளவில் அரியலூர் காவல்துறை 2-ம் இடத்தை பிடித்து சாதனை


மாநில அளவில் அரியலூர் காவல்துறை 2-ம் இடத்தை பிடித்து சாதனை
x
தினத்தந்தி 12 Jan 2022 7:17 PM GMT (Updated: 12 Jan 2022 7:17 PM GMT)

அவசர அழைப்புக்கு உதவியதில் மாநில அளவில் அரியலூர் காவல்துறை 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

அரியலூர்
அவசர அழைப்புக்கு உதவியதில் மாநில அளவில் அரியலூர் காவல்துறை 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கூறினார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
52 பேர் மீது குண்டர் சட்டம்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 18 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் குற்றம் சாட்டப்பட்ட 33 பேரில் 33 பேரும், போக்சோ சட்டத்தில் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 128 பேரும், 14 பாலியல் வழக்குகளில் 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த 150 திருட்டு வழக்குகளில் 143 பேர் கைது செய்யப்பட்டு ரூ.44 லட்சத்து 54 ஆயிரத்து 925 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகள் 17 பேர், போதைப்பொருள் குற்றவாளிகள் 5 பேர், திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர், மணல் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்திய 13 பேர், லாட்டரி மோசடியில் ஈடுபட்ட 2 பேர், கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் 7 பேர் என 52 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மணல் கடத்தல்
மேலும், கடந்த ஆண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 268 வழக்குகள், லாட்டரி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது 14 வழக்குகள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது 824 வழக்குகள், சட்டவிரோத மது கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது 2,654 வழக்குகள், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 35 வழக்குகள், கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சாலை பாதுகாப்பு விதிகளை மீறியதாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 766 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
போதை மற்றும் மது பழக்கத்தில் சிக்கிக்கொள்ளாமல் இளைஞர்களை காக்க காவல் துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட போதை விழிப்புணர்வு குறும்படம் தமிழ்நாடு மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு வரும் அழைப்புகளுக்கு உடனடியாக சம்பவ இடம் விரைந்து துரித நடவடிக்கை மேற்கொண்டதில் அரியலூர் மாவட்ட காவல்துறை மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story