பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு குவிக்கப்பட்ட மண்பாண்டங்கள்


பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு குவிக்கப்பட்ட மண்பாண்டங்கள்
x
தினத்தந்தி 13 Jan 2022 1:33 AM IST (Updated: 13 Jan 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு மண்பாண்டங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு  மண்பாண்டங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
பொங்கல் பண்டிகை
புதுப்பானையில் பொங்கலிட்டு செங்கரும்புடன் சூரியனுக்கு படையலிட்டு வாழ்வு வளமாக அமைய வழிபட்டு தைப்பொங்கல் திருநாளை தமிழர்கள் கொண்டாடுவார்கள்.  மாறிவரும் சூழ்நிலையில் இந்த பழக்கம் மறைந்து வருகிறது.  பெரும்பாலும் நகர்ப்புறங்களில் வீட்டிற்குள்ளேயே கியாஸ் அடுப்பில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். இருப்பினும் உழவர்கள் வாழும் கிராமப்புற பகுதிகளில் பாரம்பரிய பழக்கத்தை விடாமல் தற்போதும்   வீட்டின் முன்பு  வண்ணக் கோலமிட்டு அதில் மணல் தூவி அதன்மேல் செங்கற்களை அடுக்கி அதில் மண் பானையில் பொங்கலிட்டு வருகிறார்கள். 
கனமழை
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு, சிறிய பெரிய பானைகள் அதற்கான சட்டிகள் மூடுவதற்கான மண்ணால் செய்யப்பட்ட மடக்கு எனப்படும் மூடிகள் ஆகியவற்றை செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். பூதலூர் பகுதியில் அக்டோபர் மாதத்திலிருந்து கொட்டித் தீர்த்த மழை காரணமாக இப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணை எடுக்க இயலாமலும், செய்து வைத்த மண் பாண்டங்கள் காயவைக்க இயலாமலும் தவித்து வந்தனர். 
அரசு உதவி
பொங்கல் பண்டிகைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து மண் பானைகளை வாங்கி கொண்டு வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர். தற்போது சிறிதும் பெரிதுமாக அடுப்புகள், அதைப்போலவே மண்பானைகளை திருக்காட்டுப்பள்ளி சந்தை பகுதியிலும், பூதலூரிலும் விற்பனைக்கு குவித்து வைத்து உள்ளனர். 
ஆனால் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று கவலையுடன் வியாபாரிகள் கூறினர். காய்கறிகள், கரும்பு, வாழைத்தார், மஞ்சள் கொத்து ஆகியவற்றை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் மக்கள் மண்பானைகள் பக்கமே திரும்பாமல் செல்வது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக திருக்காட்டுப்பள்ளி சந்தை பகுதியில் கடை வைத்திருக்கும் மண்பாண்டத் தொழிலாளி ஒருவர் கூறினார்.  இந்த ஆண்டு மழை காரணமாக தொழில் செய்ய இயலாத நிலையில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாது அரசு உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story