குமரியில் புதிதாக 431 பேருக்கு தொற்று: வீட்டு தனிமையில் 510 பேருக்கு சிகிச்சை
குமரி மாவட்டத்தில் புதிதாக 431 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிப்பின் வீரியம் குறைவு என்பதால் மேலும் 510 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் புதிதாக 431 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிப்பின் வீரியம் குறைவு என்பதால் மேலும் 510 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளது. மேலும் ஒமைக்ரான் அச்சுறுத்தலும் நிலவுவதால் நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
அதிலும் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 300-க்குள் இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் ஒரே நாளில் 400-ஐ தாண்டியது. அதாவது குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், களப்பணியாளர்கள் மற்றும் சோதனை சாவடிகள் மூலமாகவும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதிதாக 431 பேர் பாதிப்பு
அதில் புதிதாக 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகரில் 140 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தவர்கள் வீடுகளிலும், தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் தற்போது 496 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் 34 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், 103 போ் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதமுள்ள 510 பேர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வேகமாக பரவி வந்தாலும் நோய்த் தொற்று பாதிப்பு மற்றும் வீரியம் குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதன் காரணமாக அதிகப்படியானவர்கள் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் தினமும் அவர்களது வீடுகளுக்கு சென்று உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.
கோர்ட்டு பணியாளர்கள்
நாகர்கோவில் மாநகரில் கடந்த சில தினங்களாகவே பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. போலீசார், வங்கி ஊழியர்கள், கலெக்டர் அலுவலக அதிகாரி உள்பட பலரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் கோர்ட்டில் பணியாற்றி வந்த நீதிபதியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் தற்போது வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கோர்ட்டு பணியாளர்களுக்கு சளி பாிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பணியாளர்கள் 2 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ரேஷன் கடை திறப்பு
மேலும் வடிவீஸ்வரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு வந்த 6 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த ரேஷன் கடை கடந்த 2 நாட்களாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. மேலும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் ரேஷன் கடை நேற்று முன்தினம் மாலை மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் நேற்று வந்திருந்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story