தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் ஓமலூர் 9-வது வார்டு நேருநகரில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-தீனதயாளன், ஓமலூர், சேலம்.
-------
சாக்கடை கழிவுகளால் மக்கள் அவதி
சேலம் மாநகராட்சி பொன்னம்மாபேட்டை 10-வது வார்டுக்கு உட்பட்ட புத்து மாரியம்மன் தெரு பகுதியில் சாக்கடை கால்வாயில் அள்ளப்பட்ட கழிவுகளை அகற்றாமல் ஆங்காங்கே குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாக்கடை கழிவுகளால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த சாக்கடை கழிவுகளால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாக்கடை கழிவுகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோ, பொன்னம்மாபேட்டை, சேலம்.
----------
பயன்படாத குடிநீர் தொட்டி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா செட்டியூர் கிராமத்தில் ஆலமரத்து அருகில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி வைத்து 6 மாதங்கள் ஆகியும் தண்ணீர் நிரப்பப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், செட்டியூர், தர்மபுரி.
--------
குப்பைகளை எரிக்கலாமா?
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பச்சுடையாம்பாளையம் ஊராட்சியில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சுவாச கோளாறு உள்பட பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பச்சுடையாம்பாளையம் , நாமக்கல்.
Related Tags :
Next Story