தடையை மீறி பாதயாத்திரை: டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்பட 64 பேர் மீது வழக்குப்பதிவு
தடையை மீறி பாதயாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா மீது மற்றொரு வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு: தடையை மீறி பாதயாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா மீது மற்றொரு வழக்குப்பதிவாகி உள்ளது.
தடையை மீறி பாதயாத்திரை
ராமநகர் மாவட்டம் கனகபுராவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கனகபுராவில் இருந்து பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் பாதயாத்திரையை தொடங்கி உள்ளனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக காங்கிரஸ் பாதயாத்திரைக்கு ராமநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி கடந்த 9-ந் தேதி பாதயாத்திரை தொடங்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, கடந்த 10-ந் தேதி டி.கே.சிவக்குமார், சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்பட 31 பேர் மீது சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினமும் டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் உள்பட 41 பேர் மீது அதே சாத்தனூர் போலீஸ் நிலையத்தில் 2-வது வழக்குப்பதிவாகி இருந்தது.
64 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில், பாதயாத்திரை ராமநகர் மாவட்டம் கனகபுராவில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றும் நடைபெற்றது. தடை உத்தரவை மீறியும், கொரோனா பரவலுக்கு மத்தியிலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பாதயாத்திரை நடத்தி வருவதாக கூறியும், அவர்கள் மீது என்.டி.எம்.ஏ. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி கனகபுரா டவுன் போலீஸ் நிலையத்தில் தாசில்தார் விஸ்வநாத் புகார் அளித்தார்.
அதன்பேரில், கனகபுரா டவுன் போலீஸ் நிலையத்தில், காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட 64 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை தொடங்கி 4 நாட்களில் காங்கிரஸ் தலைவர்கள் மீது 3-வது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்மூலம் பாதயாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story