சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் சிறுவன் உள்பட 2 பேர் கைது


சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் சிறுவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2022 3:05 AM IST (Updated: 13 Jan 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூரமங்கலம்
கேரளா செல்லும் ரெயில்
வெளிமாநிலங்களில் இருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் ரெயில்களில் சோதனை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நேற்று காலை 5.30 மணிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் தன்பாத் - ஆலப்புழா அதிவிரைவு சிறப்பு ரயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 4-வது பிளாட்பாரம் வந்தது.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்போது ரெயில்வே போலீசார் அர்ஜூனன், ராஜேந்திரன், கண்ணன், சக்திவேல் ஆகியோர் ரெயில் மற்றும் ரெயிலில் இருந்து இறங்கி செல்லும் பயணிகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 பேர், கைகளில் ஒரு பேக்கை வைத்துக்கொண்டு நடைமேடை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பேக்குகளை சோதனையிட்டனர்.
அப்போது அந்த பேக்குகளில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பாபு மண்டல் (வயது 24) என்பதும், மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தன்பாத் - ஆலப்புழா ரெயிலில் பயணம் செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் என்பவரிடம் இருந்து இந்த கை பேக்குகளை வாங்கி வந்ததும் தெரியவந்தது, உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, சேலம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ெரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த ரஞ்சனை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story