மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்,
பாலியல் பலாத்காரம்
வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 32). தொழிலாளி. இவர் கடந்த 22.5.2015-ம் ஆண்டு சேலம் கிச்சிப்பாளையத்திற்கு வந்தார். அப்போது அந்த பகுதியில் பிளஸ்-1 படித்து வந்த 17 வயது மாணவி அழுது கொண்டு இருந்தார். இதை பார்த்த அவர் மாணவியிடம் விசாரித்தபோது மாணவி, தனக்கு படிக்க விருப்பம் இல்லை. வேலைக்கு செல்லத்தான் விருப்பம் என்று கூறியுள்ளார். இதையடுத்து நைசாக பேசி மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்றார். பின்னர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இந்த நிலையில் மகளை காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த நிலையில் 2 மாதத்துக்கு பிறகு மாணவி பெற்றோர் வீட்டிற்கு வந்து, சேட்டு என்பவர் என்னை ஏமாற்றி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு தற்போது என்னை துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விட்டார் என்று கூறினார். இது குறித்து அவர்கள் கிச்சிப்பாளையம் போலீசில் 2-வதாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சேட்டுவை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சேட்டுவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.
தற்கொலை
வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது மாணவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story