கர்நாடக, கேரள காங்கிரசாருக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்க முன்வர வேண்டும்


கர்நாடக, கேரள காங்கிரசாருக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்க முன்வர வேண்டும்
x
தினத்தந்தி 4 Feb 2022 10:35 PM IST (Updated: 4 Feb 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சட்டப்படி நடந்து கொள்ள கர்நாடக, கேரள காங்கிரசாருக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

மன்னார்குடி:
காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சட்டப்படி நடந்து கொள்ள கர்நாடக, கேரள காங்கிரசாருக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். 
அண்டை மாநிலங்களை நம்பி உள்ளது
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று மன்னார்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் நீர்ப்பாசன பிரச்சினைகளில் அண்டை மாநிலங்களை நம்பி உள்ளது. குறிப்பாக பாலாறு, காவிரி, முல்லைப்பெரியாறு, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் பாசன தமிழக உரிமையை தொடர்ந்து வழங்க கர்நாடகம், கேரளா, ஆந்திர மாநிலங்கள் மறுத்து வருகிறது. 
சட்டவிரோத நடவடிக்கையில்...
தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு கர்நாடகம், தமிழகத்தில் காவிரி குறித்த அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கர்நாடக அரசு, தமிழக எல்லைக்கு அருகே மேகதாதுவில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு வரக்கூடிய உபரி நீரையும் தடுத்து நிறுத்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சதி செயலில் ஈடுபட்டு வருகிறது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆணையம் அனுமதி இன்றி மேகதாது அணை கட்ட இயலாது. அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். 
அறிவுறுத்த வேண்டும்
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்று ஆதரவு தெரிவித்து பேசியதோடு மட்டுமின்றி, நான் தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தி பேசியிருப்பதை வரவேற்கிறோம். 
அதேநேரத்தில் கர்நாடக, கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்கு காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சட்டப்படி நடந்து கொள்ள அறிவுறுத்த முன்வர வேண்டும். தமிழகத்திற்கெதிரான மத்திய அரசின் சதிதிட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 
---------

Next Story