திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி நாளில் 846 பேர் வேட்பு மனு தாக்கல்


திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி நாளில் 846 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 4 Feb 2022 10:58 PM IST (Updated: 4 Feb 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இறுதி நாளான இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 846 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இறுதி நாளான இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 846 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

273 வார்டுகள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும், 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன. 

இதையொட்டி கடந்த 28-ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதற்கிடையில் கடந்த 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்று ஒருநாள் மட்டும் வேட்பு மனு தாக்கல் நடைபெற வில்லை.

 வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளான இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் ஆர்வமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

இதையொட்டி நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சையை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நகராட்சிகள்

முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர். சிலர் தாரை தப்பட்டை அடித்து கொண்டு வந்தனர். அவர்களை போலீசார் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பே தடுத்து நிறுத்தனர். 

இதனால் வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற அலுவலகங்கள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அந்த அலுவலகங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

 இறுதி நாளான இன்று ஆரணி நகராட்சியில் 97 பேரும், திருவண்ணாமலை நகராட்சியில் 227 பேரும், திருவத்திபுரம் நகராட்சியில் 106 பேரும், வந்தவாசி நகராட்சியில் 47 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

ஆரணி நகராட்சி 7-வது வார்டில் பா.ம.க. சார்பில் போட்டியிடுபவர் முகமதுஜாகீர். இவர், சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

பேரூராட்சிகள்

அதேபோல் செங்கம் பேரூராட்சியில் 32 பேரும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 77 பேரும், தேசூர் பேரூராட்சியில் 30 பேரும், களம்பூர் பேரூராட்சியில் 21 பேரும், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 33 பேரும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 46 பேரும், பெரணமல்லூர் பேரூராட்சியில் 17 பேரும், போளூர் பேரூராட்சியில் 63 பேரும், புதுப்பாளையம் பேரூராட்சியில் 27 பேரும், வேட்டவலம் பேரூராட்சியில் 23 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

ஆக மொத்தம் ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 846 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். 

1592 பேர் 

இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 1592 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.

Next Story