வீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்ட களத்தில் பெண்ணுக்கு பிரசவம்
மராட்டியத்தில் வீடு கேட்டு பீட் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு போராட்ட களத்திலேயே பிரசவித்த உருக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் வீடு கேட்டு பீட் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு போராட்ட களத்திலேயே பிரசவித்த உருக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீடுக்காக போராட்டம்
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் வாசன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாராவ் பவார். இவருக்கு பழங்குடியின மக்கள் நலத்திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு வீடு கட்ட கிராம பஞ்சாயத்து சார்பில் நிலம் ஒதுக்கப்படவில்லை. மேலும் வீடு கட்ட நிதியும் வழங்கப்படவில்லை.
எனவே வீடு கேட்டு அப்பாராவ் பவார் குடும்பத்தினர் கடந்த 3 மாதங்களில் 2 முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
எனவே அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன் பீட் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வெளியே தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் அப்பாராவ் பவாரின் குடும்ப உறுப்பினரான நிறைமாத கர்ப்பிணி மனிஷா காலேவும் கலந்து கொண்டு இருந்தார்.
குழந்தை பிறந்தது
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மனிஷா காலேவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வாகன வசதி எதுவும் அங்கு இல்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் போராட்ட களத்திலேயே மனிஷா காலேக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தகவல் அறிந்து சிவாஜி நகர் போலீசார் அங்கு ஆம்புலன்சுடன் விரைந்து சென்றனர். எனினும் வீட்டுக்காக போராடி வரும் பெண், போராட்ட களத்தில் இருந்து செல்ல மறுத்துவிட்டார். பச்சிளம் குழந்தையுடன் அவர் தொடர்ந்து போராடி வருகிறார். மனிஷா காலேவும் அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் மனிஷா காலே, கலெக்டர் அலுவலகத்தின் வெளியே குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பீட் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரசவத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் இடையே அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story