வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்த சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்
நாகை நகராட்சி அ.தி.முக. வேட்பாளர் இறந்து விட்டதாக வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்த சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சி அ.தி.முக. வேட்பாளர் இறந்து விட்டதாக வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்த சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்
நாகை நகராட்சிக்குட்ட நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் எம்.சி.ஏ. பட்டதாரியான அமிர்தவள்ளி(வயது 33) என்பவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்குவதற்கு நாகை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது வாக்காளர் பட்டியலை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது அதில் அமிர்தவள்ளி இறந்து விட்டதாக அவரது பெயர் துணை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை வழங்க முடியாது என நகராட்சி அலுவலர்கள் மறுத்து விட்டனர்.
இறந்தவர்களின் பெயருடன்...
தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதால் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி, தான் உயிரோடு இருக்கும்போது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரோடு இடம் பெற்றது எப்படி? இந்த தவறுக்கு யார் காரணம்? என்று நகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உதவி கலெக்டர் விசாரணை
இது குறித்து உடனடியாக நாகை உதவி கலெக்டர் மணிவேலனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி கலெக்டர் மணிவேலன், வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் நாகூர் பட்டினச்சேரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கலின்போது குளறுபடி நடந்ததால் அமிர்தவள்ளி பெயர் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.
சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்
இதுதொடர்பான விசாரணை அறிக்கையை உதவி கலெக்டர், மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியில் பெயர் நீக்கல், சேர்த்தல் பணியில் ஈடுபட்டசத்துணவு அமைப்பாளர் குமுதா என்பவரை பணியிடை நீக்கம் செய்து நேற்று கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story