கடைசி நாளில் 388 பேர் வேட்புமனு தாக்கல்
திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் நேற்று கடைசி நாளில் 388 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 689 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் நேற்று கடைசி நாளில் 388 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 689 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி தேர்தல்
திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கு தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது.
திருப்பூர் மாநகராட்சியில் முதலாவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் முனியாண்டி ஆகியோரும், இரண்டாவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளர் கண்ணன், உதவி பொறியாளர் ஹரி ஆகியோரும், மூன்றாவது மண்டல அலுவலகத்தில் உதவி பொறியாளர் சுப்பிரமணியன், உதவி ஆணையாளர் வாசுகுமார் ஆகியோரும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் உதவி பொறியாளர் ராம் மோகன் குமார், உதவி பொறியாளர் ஆறுமுகம் ஆகியோரும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து வேட்பு மனு பெற்றனர்.
கடைசி நாளில் மனு தாக்கல்
நேற்று கடைசி நாள் என்பதால் காலை 10 மணிக்கே வேட்பாளர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்து காத்திருந்தனர். பின்னர் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். கடைசி நாள் என்பதால் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறைக்கு முன்பு வேட்பாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் குவிந்தனர். இதனால் வேட்பாளர்கள் நிரம்பி வழிந்தது. மாநகராட்சி அலுவலகங்கள் களைகட்டி காணப்பட்டன. முக்கிய கட்சியில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் சுயேட்சையாக சில வார்டுகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இது அந்தக் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
388 பேர் வேட்பு மனு
நேற்று ஒரே நாளில் 388 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 689 பேர் மாநகராட்சியில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக 17-வது வார்டு, 26-வது வார்டு, 42 வது வார்டுகளில் தலா 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். குறைந்தபட்சமாக 47-வது வார்டில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை இன்று காலை (சனிக்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story