பொதுமக்கள் குறைகள் பற்றிய தினத்தந்தி புகார் பெட்டி


பொதுமக்கள் குறைகள் பற்றிய தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Feb 2022 11:28 PM IST (Updated: 4 Feb 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகள் பற்றிய தினத்தந்தி புகார் பெட்டி

ஆபத்தான ரெயில்வே சுரங்கப்பாதை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெயில்வே பாலத்தின் கீழே சுரங்கப்பாதை உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகிறார்கள். அந்தப் பாலத்துக்குக் கீழே கழிவுநீர் கால்வாயும் செல்கிறது. அதில் எப்போதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பாலத்தின் கீழே சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. ஒரு இடத்தில் இரும்புக்கம்பி 2 அடி நீளத்துக்கு நீட்டிக்கொண்டு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  -காதர்பாஷா, ஆம்பூர்.

பாழடைந்த பொதுக்கிணறை தூர்வாருவார்களா?

  திருவண்ணாமலை நகராட்சி பழைய 18 புதிய 10-வது வார்டில் பெருமாள் நகர்(எம்.ஜி.ஆர்.நகர்) பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பொதுக் கிணறு மழையால் பாழடைந்துள்ளது. எங்கள் பகுதி மக்கள் அந்தக் கிணற்று தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்தக் கிணறு தற்போது பாழடைந்து கிடப்பதால் மக்கள் சிரமப்படுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் பொதுக் கிணறை தூர்வாரி சீரமைப்பார்களா?
  -விஷ்ணு, திருவண்ணாமலை.

 கழிவுநீா் கால்வாைய சீரமைக்க வேண்டும்

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சங்கிலிகுப்பம் ஊராட்சி மாராபட்டு கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டாக தூர்வாரி பராமரிக்காமல் உள்ளது. கால்வாய் மேல் மூடி உடைந்து காணப்படுகிறது. சிறுவர், சிறுமிகள் தவறி கால்வாயில் விழுந்து விடுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் மேல் மூடி போட்டு சீரமைக்க வேண்டும்.
  -சங்கர், சங்கிலிகுப்பம்.

குண்டும் குழியுமான சாலை

  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ராமாபுரம் கிராமத்தில் இருந்து செதுவாலை தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள ஊரக சாலை பழுதடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை 3 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் நடுவே ஆபத்தான பள்ளமும் உள்ளது. செதுவாலை ஏரியில் இருந்து பாசனத்துக்கு திறக்கும் தண்ணீர் வயல்களில் பாய்ந்து உபரிநீர் சாலையை கடந்து செல்கிறது. இதனால் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமாகிறது. சாலையின் நடுேவ நீர் நிறைந்த பள்ளத்தை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்குமா?
  -ச.யுவராஜ், சமூக ஆர்வலர், ராமாபுரம்.

 சாலையில் சிக்கி திணறும் வாகனங்கள்

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி-ஆரணி சாலையில் எறும்பூர் கூட்ரோடு பகுதியில் ஒரு பாலம் சீரமைக்கும் பணி நடந்தது. அதற்காக போடப்பட்ட மாற்றுப்பாதையை சரியாக போடாததால் அதில் செல்லும் வாகனங்கள் சிக்கி திணறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்.
  -சங்கர், வந்தவாசி.
  
  
  
  

Next Story