வங்கி பெண் ஊழியர் சாலையில் அமர்ந்து மறியல். காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி போராட்டம்
ஜோலார்பேட்டை அருகே காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னையை சேர்ந்த வங்கி பெண் ஊழியர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னையை சேர்ந்த வங்கி பெண் ஊழியர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் டிரைவருடன் காதல்
சென்னை வடபழனி பஜனை கோவில் பகுதியை சேர்ந்த சேகர் மகள் ரத்திகா (வயது 26). பட்டதாரியான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். சென்னையில் கார் டிரைவராக வேலைபார்த்த திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் ஆத்தூரான் வட்டத்தை சேர்ந்த தனபால் மகன் கோசல்ராமன் (24) என்பவருக்கும், ரத்திகாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காதலன் வீட்டுக்கு வந்தார்
கோசல்ராமன் ரத்திகா வீட்டிற்கு சென்று தங்கி வந்ததாக கூறப்படுகிறது. கோசல்ராமன், ரத்திகாவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ரத்திகா தன்னை திருமணம் செய்யக்கோரி பலமுறை வற்புறுத்தி உள்ளார். இதனை தட்டிக்கழித்து வந்த கோசல்ராம் சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டதாக தெரிகிறது.
எனவே ரத்திகா, கோசல்ராமை தேடி 13 நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கோசல்ராம் வீட்டின் அருகிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை கோசல்ராம் தந்தை தனபால் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ரத்திகா தனபால் மீது நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் அமர்ந்து தர்ணா
இந்த நிலையில் ரத்திகா நேற்று மாலை கோசல்ராம் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்ததும் கோசல்ராம் உறவினர்கள் ரத்திகாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரத்திகா தாமலேரிமுத்தூர் ஒட்டப்பட்டி செல்லும் சாலையில் அன்பழகன் நகர் அருகே சாலையில் தனியாளாக தர்ணாவில் ஈடுபட்டார்.
ரத்திகாவிற்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்கள் இருந்தனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, செல் போனை பெற்று அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் கூறியதால் தர்ணாவை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story