மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தி.மு.க.வினர் தாக்குதல்


மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தி.மு.க.வினர் தாக்குதல்
x
தினத்தந்தி 4 Feb 2022 11:31 PM IST (Updated: 4 Feb 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தி.மு.க.வினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தி.மு.க.வினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்பு மனுதாக்கல்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தி.மு.க.- அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேலூர் மாநகராட்சி 56-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் துளசி என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேலூர் தொகுதி செயலாளர் சங்கர் (வயது 29) என்பவருடன் மனுதாக்கல் செய்ய மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்திற்கு வந்திருந்தார். மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேரை மட்டுமே உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் போலீசார் அனுமதித்தனர்.

இந்தநிலையில் தி.மு.க. வேட்பாளர் ஒருவர் மனுதாக்கல் செய்ய எம்.எல்.ஏ. கார்த்திகேயனுடன் அங்கு வந்தார். அப்போது அவருடன் ஏராளமான தி.மு.க.வினரும் உடன் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சங்கர் தி.மு.க.வை சேர்ந்தவர்களை மட்டும் அதிகமாக வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கலாமா? என்று பேசியதாக தெரிகிறது.

தாக்குதல்

அதைத்தொடர்ந்து தி.மு.க.வினருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அலுவலகத்தின் வெளியே வந்த சங்கரை தி.மு.க.வினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் பிடியில் இருந்து சங்கர் தப்பி செல்லும் போது, தி.மு.க.வினர் அவரை விரட்டி சென்று தாக்கியதாக தெரிகிறது. பின்னர் போலீசார் அவரை மீட்டனர். 

சங்கர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சங்கர் கூறுகையில், மனுதாக்கல் செய்ய ஏராளமான தி.மு.க.வினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்தனர். இதுகுறித்து கேட்டபோது தி.மு.க.வினர் என்னை தாக்கினர். உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது என்றார். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கர் வேலூர் தெற்கு போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.


Next Story