இறந்தவர் உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள்-பொதுமக்கள் தர்ணா


இறந்தவர் உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள்-பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 Feb 2022 12:29 AM IST (Updated: 5 Feb 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இறந்தவர் உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால்  இறந்தவர் உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயானத்தில் அடிப்படை வசதி இல்லை
மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களில் யாராவது இறந்தால் அடக்கம் செய்வதற்கான மயானம், ெரயிலடி அருகில் முத்தப்பன் காவிரி கரையோரம் உள்ளது. இந்த சுடுகாட்டில் இதுவரை இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கான கொட்டகை, மின்விளக்கு, சாலை வசதி, இறுதி காரியங்கள் செய்வதற்கான தண்ணீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். 
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் நேற்று கிட்டப்பா நகரை சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் இறந்ததையடுத்து அவரது உடலை மயானத்திற்கு கொண்டு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் ராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு, இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story