2,284 வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்


2,284 வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்
x
தினத்தந்தி 5 Feb 2022 12:36 AM IST (Updated: 5 Feb 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி, துறையூர், மணப்பாறை, லால்குடி, முசிறி, துவாக்குடி நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் போட்டியிட 2 ஆயிரத்து 284 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி, பிப்.5-
திருச்சி மாநகராட்சி, துறையூர், மணப்பாறை, லால்குடி, முசிறி, துவாக்குடி நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் போட்டியிட 2 ஆயிரத்து 284 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுதாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.
திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகள் ஆகியவற்றில் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா வெளியேறியதால் தனித்து களம் காண்கிறது. இதுபோல பா.ஜனதா கட்சி, தே.மு.தி.க., பா.ம.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பி க்கையில் சுயேட்சைகளும் களம் காண்கிறார்கள்.
நேற்று வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் போட்டி போட்டு மனுதாக்கல் செய்தனர். நேற்று முன் தினம் வரை 1,026 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 258 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
2,284 வேட்பாளர் மனு தாக்கல்
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 718 வேட்பாளர்களும், துறையூர், துவாக்குடி, மணப்பாறை, லால்குடி மற்றும் முசிறி ஆகிய 5 நகராட்சிகளில் உள்ள 120 வார்டுகளில் 676 வேட்பாளர்களும், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தைப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணனூர், சிறுகமணி, தா.பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளில் உள்ள 216 வார்டுகளில் 890 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆக 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகளில் மொத்தம் 2,284 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று மனுக்கள் பரிசீலனை
இன்று (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 7-ந் தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடக்கிறது. அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சுயேட்சைகளுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும்.
19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வார்டு வேட்பாளர்கள் யார்? என்பது தெரிந்து விடும் என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story