979 வார்டுகளில் போட்டியிட 4,581 பேர் வேட்பு மனு தாக்கல்
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்தலில் போட்டியிட 4,581 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளில் 1,491 பேர் மனு அளித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்தலில் போட்டியிட 4,581 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளில் 1,491 பேர் மனு அளித்தனர்.
ஒரே நாளில் 1,491 பேர் தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் உள்ள 979 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். நேற்று முன்தினம் வரை 3,090 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 192 பேரும், நகராட்சிகளுக்கு 243 பேரும், பேரூராட்சிகளுக்கு 2,655 பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
மாநகராட்சியில் 192 பேர்
இந்தநிலையில் கடைசி நாளான நேற்று அறிவிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்து ஏமாற்றம் அடைந்தவர்கள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதனால் நேற்று காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மாநகராட்சி அலுவலகம் பரபரப்புடன் காட்சி அளித்தது. மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. வேட்பாளர்களுடன் வந்தவர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்ததால் மாநகராட்சி அலுவலக பகுதி மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு சீட் கிடைக்காத விரக்தியில் தங்களது கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநகராட்சியில் நேற்று மாலை வரை 192 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
4,581 போ் போட்டி
இதேபோல் கொல்லங்கோடு நகராட்சிக்கு 95 பேரும், குளச்சல் நகராட்சிக்கு 22 பேரும், பத்மநாபபுரம் நகராட்சிக்கு 67 பேரும், குழித்துறை நகராட்சிக்கு 33 பேரும் என 217 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பேரூராட்சிகளை பொறுத்தவரையில் 51 வார்டுகளிலும் நேற்று 1,082 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் நேற்று ஒரே நாளில் 1,491 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். இதுவரை 56 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 979 வார்டுகளுக்கு 4,581 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. வேட்பு மனுக்கள் திரும்பப்பெற கடைசி நாள் 7-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
பரிசீலனை
நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், ஆணையருமான ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் 192 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 384 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் பரிசீலனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story