‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான குழி
ஈரோடு நாடார்மேடு காமராஜர் வீதி நுழைவு பாதையில் பால்பண்ணை மற்றும் சலூன்கடை உள்ளது. இந்த கடைகளுக்கு முன்பாக தெரு சாலையில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பணிக்காக குழிதோண்டப்பட்டது. குடிநீர் குழாய் இணைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆகியும் அந்த குழி இன்னும் மூடப்படாமல் உள்ளது. அந்த வழியாக கடைகளுக்கு வருபவர்கள் குழி இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விட நேரிடுகிறது. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகன போக்குவரத்தும் எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படும். இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்த குழி இருப்பது தெரியாமல் கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. அந்த குழிக்குள் குப்பைகளும் கிடக்கிறது. எனவே ஆபத்து ஏற்படும் முன் பணி முடிந்த அந்த குழியை கான்கிரீட் சிலாப் வைத்து மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், காமராஜர்வீதி, ஈரோடு.
கோவில் அருகில் குப்பை
அவல்பூந்துறையில் பழமையான பெரியகாண்டியம்மன் அண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நுழைவு வாயில் அருகிலேயே குப்பையை கொண்டுவந்து போட்டு குவித்துள்ளார்கள். காற்று வேகமாக வீசும்போது குப்பை தூசுகள் கோவில் வளாகத்துக்குள் பறந்துவந்து விழுகின்றன. இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே கோவில் அருகில் குப்பை கொட்டுவதை தடுக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ், மொடக்குறிச்சி.
தேங்கிய சாக்கடை
பவானிசாகர் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி ஏரங்காட்டுப்பாளையத்தில் 4 மாதங்களாக சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே தேங்கியுள்ள கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லவும், சாக்கடையை உடனே தூர்வாரவும் நடவடிக்கை எடுப்பார்களா?
மதன்குமார், ஏரங்காட்டுப்பாளையம்.
மின்வாரிய புகார் புத்தகம்
ஊஞ்சலூரில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டால் அதுகுறித்த புகார்களை தெரிவிக்க மின்வாரியம் ஒரு புகார் புத்தகம் வழங்கியிருந்தது. இணைப்புகள் துண்டிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இணைப்பு எண்ணை இதில் எழுதி வைத்துவிடுவார்கள். சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர் இந்த புத்தகத்தை பார்த்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரிசெய்வார். ஆனால் தற்போது புகார் புத்தகம் இல்லை. அதனால் மின்வாரிய அதிகாரிகள் ஊஞ்சலூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திலோ மீண்டும் மின்வாரிய புகார் புத்தகம் கொண்டு வந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஊஞ்சலூர்.
விபத்து ஏற்படும் வளைவு
கருமாண்டம்பாளையம் அடுத்துள்ள மலையம்பாளையத்தில் போலீஸ் நிலையம் அருகே ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் ஆபத்தான வளைவு உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வளைவு இருப்பதால் ஏற்கனவே விபத்து நடந்து பலமுறை உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மலையம்பாளையத்தில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
மாயவன், ஈரோடு.
வேகத்தடை வேண்டும்
ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து சவீதா சிக்னல் வரை செல்லும் ரோட்டில் பஸ், கார், லாரி என எப்போதும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். ஆனால் இந்த ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சவீதா சிக்னலில் இருந்து பஸ்நிலையம் வரை உள்ள ரோட்டில் தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், ஈரோடு.
வீணாகும் குடிநீர்
ஈரோடு குமலன் குட்டையில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் ரோடும் பழுதாகிவிட்டது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் வீணாக செல்வது ஏற்புடையது அல்ல. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை உடனே சரிசெய்ய வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
பாராட்டு
கோபி 19-வது வார்டில் தங்கமணி எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஆழ்குழாய் கிணறில் மோட்டார் பொருத்தப்படாமல் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆழ்குழாய் கிணறுக்கு புதிய மோட்டார் அமைத்துள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்கள்.
கணேஷ், கோபி.
Related Tags :
Next Story