நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அலுவலர்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சேலம்,
1,519 வாக்குச்சாவடிகள்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக 38 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 87 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் சேலம் மாநகராட்சியில் 709 வாக்குச்சாவடிகளில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 361 வாக்காளர்களும், 6 நகராட்சிகளில் 273 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 778 வாக்காளர்களும், 31 பேரூராட்சிகளில் 537 வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 894 வாக்காளர்களும் என மொத்தம் 1,519 வாக்குச்சாவடிகளில் 13 லட்சத்து 36 ஆயிரத்து 33 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த தேர்தலுக்கு மாநகராட்சி பகுதியில் 1 வாக்கு எண்ணும் மையமும், நகராட்சி பகுதிகளில் 6 வாக்கு எண்ணும் மையங்களும், பேரூராட்சி பகுதிகளில் 9 வாக்கு எண்ணும் மையங்களும் என மொத்தம் 16 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் இடங்கணசாலை நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் அமைந்துள்ள இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் சங்ககிரி, கொங்கணாபுரம், தேவூர், அரசிராமணி ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அலுவலர்களுக்கு உத்தரவு
அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு பணிகளை கலெக்டர் கார்மேகம் மேற்கொண்டார். குறிப்பாக, வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story