சேலம் மாநகராட்சி தேர்தல் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் மும்முரம் வேட்பாளர்கள் திரண்டதால் பரபரப்பு


சேலம் மாநகராட்சி தேர்தல் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் மும்முரம் வேட்பாளர்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 1:37 AM IST (Updated: 5 Feb 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி தேர்தலில் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் மும்முரமாக நடந்தது. வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம்,
வேட்புமனு தாக்கல்
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 4 மண்டல அலுவலகங்களிலும் கடந்த மாதம் 28-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதலில் சுயேச்சைகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர். அதன்பிறகு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்ததால் கடந்த 3 நாட்களில் அரசியல் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய திரண்டனர்.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் அதிகளவில் திரண்டனர். அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களிலும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வமுடன் வந்தனர். சில வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு அந்தந்த பகுதிகளில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததை காணமுடிந்தது.
போட்டிப்போட்டு
இதனால் மண்டல அலுவலகங்களில் திருவிழா போன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.. வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வேட்பாளர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். ஒரே நேரத்தில் அதிகளவில் வேட்பாளர்கள் போட்டிப்போட்டு வந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேட்பாளருடன் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் ஊர்வலமாக அதிகளவில் வந்திருந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 6 நகராட்சிகள், கன்னங்குறிச்சி, கருப்பூர் உள்பட 31 பேரூராட்சிகளிலும் நேற்று வேட்பாளர்கள் ஏராளமானவர்கள் மும்முரமாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


Next Story