ஓமலூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: 4 பேர் கைது; 31 பவுன் நகைகள் மீட்பு கொள்ளையர்கள் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
ஓமலூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.
ஓமலூர்,
வயதான தம்பதி
ஓமலூரில் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 71). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மேரி கிளாரா (62). இவர், அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர்களுக்கு அலெக்ஸ், ரெக்ஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். அலெக்ஸ் ரஷ்யா நாட்டில் டாக்டராகவும், ரெக்ஸ் கோவையில் டாக்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு ஆரோக்கியசாமியும், மேரி கிளாராவும் சென்று இருந்தனர்.
31 பவுன் நகை கொள்ளை
இதற்கிடையே ஆரோக்கியசாமி வீட்டுக்கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் செல்போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே புறப்பட்டு ஆர்.சி. செட்டிப்பட்டிக்கு வந்தார். வீட்டுக்கு சென்று பார்த்த போது கதவு திறந்து கிடந்தது.
வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இன்னொரு சம்பவம்
இதற்கிடையே ஆரோக்கியசாமி வீட்டில் கொள்ளை நடந்த அன்று இரவு, ஓமலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் வசித்து வரும் அர்ஜூனன் என்பவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அர்ஜூனனின் மனைவி லீலா (32) கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்தும் ஓமலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
4 பேர் கைது
இந்த நிலையில் சேலம் பள்ளப்பட்டி போலீசார் ஒரு திருட்டு வழக்கில் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (35), தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (37), தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் (35), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த 4 பேரையும் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆரோக்கியசாமி வீட்டில் நகைகள் கொள்ளையடித்தது, அர்ஜூனன் மனைவியிடம் தங்க சங்கிலி பறித்தது இவர்கள் 4 பேரும் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 31 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
அதிர்ச்சி தகவல்கள்
அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
கைதான பாண்டியன் மீது 40 திருட்டு வழக்குகள் உள்ளன. 6 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் அண்ணாமலை மீது 20 கொள்ளை வழக்குகளும், 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குமார் மீது ஒரு திருட்டு வழக்கு மற்றும் வழிப்பறி வழக்கு உள்ளது. அவர், ஒரு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது பெருந்துறை, தாரமங்கலம், பள்ளப்பட்டி, ஓமலூர், தீவட்டிப்பட்டி, ஆரணி, செஞ்சி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றாக சிறையில் இருந்ததும், அங்கிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story