வேட்புமனு தாக்கல் குறித்து சேலத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
வேட்புமனு தாக்கல் குறித்து சேலத்தில் நேற்று தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
சேலம்,
தேர்தல் பார்வையாளர்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக சென்னை வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி மண்டல அலுவலத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் வேட்புமனு தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் முறையாக பின்பற்றபடுகிறதா? என்றும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
வழிமுறைகள்
வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் முறையாக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுகிறார்களா? என்பதை கேட்டறிந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் பார்வையாளர் அண்ணாதுரை ஆலோசனை நடத்தினார்.
சூரமங்கலம் மண்டல அலுவலகத்திலும் தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை ஆய்வு செய்து அங்கு தேர்தல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வரும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கட்டுப்பாட்டு அறை
இதைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இருந்த அலுவலர்களிடம் கட்டுப்பாட்டு அறையில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்? தேர்தலை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
சூரமங்கலம்
மேலும் சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை, சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் நடந்த வேட்பு மனு தாக்கலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா சரியாக செயல்படுகிறதா? என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சிபிசக்கரவர்த்தி உடன் இருந்தார்.
Related Tags :
Next Story