சென்னிமலை பகுதியில் மர்ம விலங்கு கடித்து குதறியதில் 6 ஆடுகள் சாவு- 2 மாதங்களில் 29 ஆடுகள் பலி
சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 6 ஆடுகள் இறந்தன. கடந்த 2 மாதங்களில் 29 ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளார்கள்.
சென்னிமலை
சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 6 ஆடுகள் இறந்தன. கடந்த 2 மாதங்களில் 29 ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளார்கள்.
மர்ம விலங்கு
சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் உள்ள மாரியம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 56) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் ஆட்டுப்பட்டி அமைத்து 60 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் உடனடியாக பட்டிக்கு சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் 3 ஆடுகளும், 3 ஆட்டுக்குட்டிகளும் இறந்து கிடந்தன. அதைப்பார்த்து சென்னியப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் 2 ஆடுகள் கடிபட்ட நிலையில் படுகாயத்துடன் காணப்பட்டன. இதுகுறித்து சென்னிமலை கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவர் சுரேஷ் விரைந்து சென்று படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். ஏதோ மர்ம விலங்கு நேற்று முன்தினம் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடியது தெரிய வந்தது.
பின்னர் இறந்து கிடந்த ஆடுகள் அந்த பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
தொடரும் சம்பவம்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியான முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகாட்டுதோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் 4 ஆடுகளும், 4 ஆட்டு குட்டிகளும் பட்டப்பகலில் மர்ம விலங்கு கடித்ததால் இறந்தன.
இதேபோல் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவரின் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளை பட்டப்பகலில் மர்ம விலங்கு வேட்டையாடியது. கோவில்பாளையம் புதுக்கிணறு தோட்டத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர் கடந்த வாரம் ஆடுகளை தன்னுடைய தோட்டத்தில் மேயவிட்டிருந்தார். அப்போதும் பகல் நேரத்திலேயே அங்கு வந்த மர்ம விலங்கு கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவில்பாளையத்தை சேர்ந்த கண்டக்டர் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ்பட்டியில் இருந்த ஒரு ஆடும் மர்ம விலங்கு கடித்ததில் இறந்தது.
இதுமட்டுமின்றி கடந்த மாதம் 24-ந் தேதி இரவு பட்டியில் புகுந்து கடித்ததில் முகாசிபிடாரியூர் ஈஸ்வரன் கோவில் தோட்டத்தை சேர்ந்த குமரவடிவேல் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகள் பலியாகின. அதே பகுதியை சேர்ந்த நத்தக்காட்டுத்தோட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.
நிவாரணம்
இந்த சம்பவங்கள் குறித்து ஆடுகளை பறிகொடுத்த கார்த்திகேயன் என்பவர் கூறும்போது, ‘தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை பட்டப்பகலிலேயே ஏதோ விலங்கு கடித்துக்கொன்றுள்ளது. ஆடுகளை அடைத்து வைக்க சுற்றிலும் பாதுகாப்பான முறையில் கம்பி வேலி அமைத்துள்ளோம்.
இதனையும் மீறி கம்பி வேலியின் அடிப்பகுதியில் நுழைந்து உள்ளே சென்று ஆடுகளை கடித்து குதறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் ஆடுகளை பாதுகாக்க வேண்டும். இதுவரை கடந்த 2 மாதங்களில் மர்ம விலங்கு கடித்து குதறியதில் 29 ஆடுகள் பலியாகி உள்ளன. இதற்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகள் பெற்றுத்தரவேண்டும்' என்றார்.
Related Tags :
Next Story