ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மாணவிகள் வழக்கு
முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரும் விவகாரம் தொடர்பாக மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதற்கு தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
பெங்களூரு:
பர்தா அணிந்து வரக்கூடாது
உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.ஆனால் முஸ்லிம் மாணவிகள் சீருடை மீது அதாவது தலைப்பகுதியை மூடும் பர்தா அணிந்து வருகிறார்கள். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் அந்த தடையை மீறி அந்த மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். பதிலுக்கு அந்த கல்லூரியை சேர்ந்த 100 மாணவர்கள் காவி துண்டை தோளில் போட்டு வந்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் சீருடைகளுடன் பர்தா, காவி துண்டு உள்ளிட்ட மத உணர்வுகளை தூண்டும் வகையிலான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்றும், கல்லூரி நிர்வாகத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு பர்தாவுடன் வந்த மாணவிகள் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
அரசின் நிலைப்பாடு
கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உடுப்பியில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் விசாரணைக்கு எற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
8-ந் தேதி விசாரணை
அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா எஸ், தீக்சித் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதாட இருக்கிறார். எனவே இந்த வழக்கை வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம் மாணவிகள் சம்பந்தப்பட்டது, அவர்களது கல்வி பாதிக்கப்படுவதால் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வக்கீல் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் மாணவிகளுக்கான ஆடை கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் முழு விசாரணை நடைபெற இருக்கிறது.
முதல்-மந்திரி ஆலோசனை
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி, தலைமை செயலாளர் ரவிக்குமார் மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், சீருடை விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கில் கர்நாடக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சீருடை தவிர பிற ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பிறகு மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சீருடை அணிய வேண்டும்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நானும் கலந்து கொண்டேன். சீருடை விவகாரத்தில் ஐகோர்ட்டில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சீருடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு என்பது குறித்து தெரிவிக்கும்படி முதல்-மந்திரி கூறியுள்ளார். குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் அனைத்து மாணவ-மாணவிகளும் சீருடை அணிய வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதுகுறித்து அரசு சுற்றறிக்கை வெளியிடும். கல்வி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாது. அதனால் அனைத்து மாணவர்களும் விதிமுறைகளை பின்பற்றி சீருடை அணிந்து வர வேண்டும். சீருடையை அனுமதிப்பது குறித்து கர்நாடக கல்வி சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அதுபற்றி முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே குந்தாப்புரா பி.யூ.கல்லூரி நிர்வாகம் சீருடை விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
2 மாதங்களில் தேர்வு
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது, சீருடை அணிய வேண்டும் என்ற விதிமுறையை ஏற்பதாக கூறி கையெழுத்து போட்டுள்ளனர். அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பிறகு திடீரென தங்களின் நிலையை மாற்றுவது சரியல்ல. கர்நாடக ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் உத்தரவு வரும் வரை தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது சீருடை அணிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். பிற ஆடைகள் அணிந்து வர அனுமதி இல்லை.
மும்பை, கேரளா ஐகோர்ட்டுகளும், சீருடை தவிர பிற ஆடைகளை அணிந்து வர தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளன. இன்னும் 2 மாதங்களில் தேர்வு நடக்கிறது. அதனால் மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று அரசு கருதுகிறது. பிற ஆடைகளை அணிந்து வருவது அவரவர்களின் உரிமை என்று சித்தராமையா கூறியுள்ளார். மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் இவ்வாறு கூறுவது சரியல்ல. கல்வி கூடங்களில் மத உணர்வுகளுக்கு இடம் இல்லை. அங்கு அனைவரும் சமம்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story