மாற்றுத்திறனாளி மகனை கொன்று கணவன்-மனைவி தற்கொலை


மாற்றுத்திறனாளி மகனை கொன்று கணவன்-மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2022 12:09 AM GMT (Updated: 5 Feb 2022 12:09 AM GMT)

சகோதரிக்கு செல்போனில் தகவல் அனுப்பிவிட்டு, மாற்றுத்திறனாளி மகனை கொன்று, கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆவடி,

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள கோவில்பதாகை மசூதி தெருவைச் சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 44). இவர் சென்னை அசோக் நகரில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சோபியா நஜீமா (37). இவர்களுடைய ஒரே மகன் அப்துல் சலீம் (14).

மாற்றுத்திறனாளியான அப்துல் சலீம், பிறந்ததில் இருந்தே காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் இருந்து வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என தெரிகிறது. இதனால் முகமது சலீம், சோபியா நஜீமா இருவரும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தனர்.

செல்போனில் தகவல்

இந்தநிலையில் நேற்று காலை முகமது சலீம், மாங்காட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி சலீனா (48) செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அதில், “இந்த குறுஞ்செய்தியை படிக்கும்போது நாங்கள், எங்கள் வாழ்க்கையை முடித்து இருப்போம். இந்த இடம் மற்றும் பொருட்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நகைகளை எனது சகோதரியின் மகளுக்கு கொடுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அந்த குறுஞ்செய்தியில் அனுப்பி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சலீனா, அவருடைய கணவர் அமீன் மற்றும் மகள் நஜ்மா ஆகியோர் உடனடியாக முகமது சலீம் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

3 பேரும் பிணமாக கிடந்தனர்

அப்போது வீட்டின் படுக்கை அறையில் அப்துல் சலீம் தலை, முகம் முழுவதும் பாலித்தீன் பையால் சுற்றப்பட்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தார். அங்குள்ள மின்விசிறி மற்றும் அதன் கொக்கியில் முகமது சலீம் மற்றும் சோபியா நஜீமா ஆகிய இருவரும் தங்கள் முகத்தில் பாலித்தீன் பையால் மூடிய நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் மற்றும் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கடிதங்கள் சிக்கியது

மேலும் அவர்களது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 3 இடங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதங்களை போலீசார் கண்டெடுத்தனர். அதில் ஒரு கடிதத்தில், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நாங்களே எடுத்த முடிவு. எங்கள் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று போலீசாருக்கு எழுதி, கணவன்-மனைவி இருவரும் கையெழுத்து போட்டு இருந்தனர்.

மற்றொரு கடிதத்தில், “இப்படிப்பட்ட முடிவு எடுத்ததற்காக எங்களை மன்னித்துவிடுங்கள்” என்று உறவினர்களுக்கு 3 பேரும் எழுதியதுபோல் பெயர் எழுதப்பட்டு இருந்தது.

3-வதாக இருந்த துண்டு காகிதத்தில் “எங்களை இந்த பாலித்தீன் பையால் மூடவும்” என்று எழுதி, ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருந்த நீளமான பாலித்தீன் பை மீது அந்த துண்டு காகிதத்தை வைத்து இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மகனை கொன்று தற்கொலை

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முகமதுசலீம்-சோபியா நஜீமா ஆகியோரது மகன் அப்துல் சலீம் பிறந்தது முதல் காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் இருந்ததால் ஏற்பட்ட மனவிரக்தியில் தங்கள் மகனின் முகத்தில் பாலித்தீன் பையை போட்டு கட்டி அவரை கொன்றுவிட்டு, அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் தங்கள் முகத்திலும் பாலித்தீன் பையை போட்டு மூடியதுடன், தூக்குப்போட்டும் தற்கொலை செய்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளி மகனை கொன்றுவிட்டு கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story