மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு


மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Feb 2022 5:08 PM IST (Updated: 5 Feb 2022 5:08 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு செய்தார். 

திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மாநில தேர்தல் ஆணையத்தால் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பார்வையாளராக எம்.எஸ்.சங்கீதா நியமிக்கப்பட்டு உள்ளார்.

 திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.எஸ்.சங்கீதா திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, வட்டார தேர்தல் பார்வையாளர் சந்திரா ஆகியோரிடம் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும்,  தபால் வாக்கு, வாக்குச்சாவடி மையம் அமைப்பது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். 

மேலும் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன. பதற்றமானவை எத்தனை என்று கேட்டறிந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர், நகராட்சியில் 144 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், அதில் 20 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிவித்தார். 

ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீபிரகாஷ், தேர்தல் உதவியாளர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆரணி

ஆரணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சுயேச்சை உள்பட தேர்தலில் போட்டியிட 198 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. அதில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. 

இப்பணியை திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா ஆய்வு செய்தார். 

அப்போது ஆரணி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான பி.தமிழ்ச்செல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவிச்சந்திரன், மேனகா, சரவணன், பொறியாளர் டி.ராஜவிஜய காமராஜ், அலுவலக மேலாளர் நெடுமாறன், ஆய்வாளர் மோகன் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

போளூர்

தேர்தல் கண்காணிப்பாளரும், ஆரணி உதவி கலெக்டருமான கவிதா இன்று போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பரிசீலனை செய்யப்பட்ட வேட்புமனுக்கள், தேர்தலுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்தவைகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் முஹம்மது ரிஜ்வான், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவி, காசி, குப்புசாமி, தலைமை எழுத்தர் முகமது ஈசாக் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் போட்டியிட 87 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. 


Next Story