‘சங்கர்’ யானைக்கு கும்கி பயிற்சி


‘சங்கர்’ யானைக்கு கும்கி பயிற்சி
x
தினத்தந்தி 5 Feb 2022 7:00 PM IST (Updated: 5 Feb 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடியில் 3 பேரை கொன்ற சங்கர் யானைக்கு கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த யானை பாகன்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து உள்ளது.

கூடலூர்

சேரம்பாடியில் 3 பேரை கொன்ற ‘சங்கர்’ யானைக்கு கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த யானை பாகன்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து உள்ளது. 

3 பேரை கொன்ற யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்்து வருகின்றன. இவை உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக ஊருக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இந்த சமயத்தில் மனிதர்களுக்கும், காட்டுயானைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது.

இந்த நிலையில் பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதியில் ஊருக்குள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்த சங்கர் என்ற காட்டுயானை தந்தை-மகன் உள்பட 3 பேரை தாக்கி கொன்றது. இதையடுத்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் அந்த காட்டுயானையை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் முகாமில் அமைத்திருந்த மரக்கூண்டில் அடைத்தனர். 

சாதுவாக மாறியது

காட்டுயானை என்பதால் கூண்டுக்குள் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. நாளடைவில் சாதுவாக மாறியது. பின்னர் மரக்கூண்டில் இருந்து காட்டுயானையை வனத்துறையினர் வெளியே அழைத்து வந்தனர். தொடர்ந்து முகாமில் கும்கி யானைகள் பின்பற்றக்கக்கூடிய பழக்க வழக்கங்களை வனத்துறையின் பாகன்கள் குழுவினர் கற்று கொடுக்க தொடங்கினர். 

முதற்கட்டமாக எளிய பயிற்சிகளை அளித்து வந்தனர். அதாவது தினமும் காலையில் முகாம் இருந்து வனத்துக்குள் மேய்ச்சலுக்கு செல்வது, மாயார் ஆற்றில் குளிப்பது, ரோந்து பணி மேற்கொள்வது, முகாமில் சக யானைகளுடன் வரிசையாக நின்று ஊட்டச்சத்து உணவுகளை வாங்கி சாப்பிடுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.

கும்கி பயிற்சி

2-வது கட்டமாக கும்கி யானைகள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி தொடங்கப்பட்டது. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை அடக்குவது, ராட்சத மரங்களை தூக்கி செல்வது, கட்டுப்படாமல் ஓடும் காட்டுயானைகளை பிடித்து இழுத்து செல்வது உள்ளிட்ட பயிற்சிகள் தினமும் அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டுயானைக்கு உரிய மூர்க்க குணத்துடன் காணப்பட்ட சங்கர், தொடர் பயிற்சி மூலம் சாந்தமாக மாறிவிட்டது. இதனால் கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பாகன்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து, உத்தரவுக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றனர்.


Next Story