கோவிலுக்கு சொந்தமான கடைக்கு ‘சீல்’


கோவிலுக்கு சொந்தமான கடைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 5 Feb 2022 7:00 PM IST (Updated: 5 Feb 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ரூ.21½ லட்சம் வாடகை பாக்கி இருந்ததால், கோவிலுக்கு சொந்தமான கடைக்கு ‘சீல்’ வைத்து, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.

ஊட்டி

ஊட்டியில் ரூ.21½ லட்சம் வாடகை பாக்கி இருந்ததால், கோவிலுக்கு சொந்தமான கடைக்கு ‘சீல்’ வைத்து, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.

வாடகை செலுத்தவில்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 3 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. 

அதில் ஹார்டுவேர் கடை ஒன்று 2,793 சதுர அடி பரப்பளவில் வாடகை மூலம் இயங்குகிறது. ஆனால் கடந்த 30 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறைக்கு வாடகை செலுத்தாமல் வியாபாரி கடையை நடத்தி வந்து உள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியும் குறிப்பிட்ட காலத்துக்குள் வாடகையை செலுத்தவில்லை.

‘சீல்’ வைப்பு

இந்தநிலையில் நேற்று காலையில் ஆஞ்சநேயர் கோவில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாரியம்மன் கோவில் தக்கார் முத்துராமன், கோவில் பணியாளர்கள் வாடகை செலுத்தாத ஹார்டுவேர் கடையின் தரைத்தளம் மற்றும் மேல்தளத்தை பூட்டி சீல் வைத்தனர். 

இதற்கான நோட்டீஸ் கதவுகளில் ஒட்டப்பட்டது. அதில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் ரூ.21 லட்சத்து 57 ஆயிரத்து 300 பாக்கி இருந்ததால், கோவில் நலன் மற்றும் நன்மை கருதி கோவில் கட்டிடம் சீல் வைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

2½ ஆண்டுகளாக...

இதுகுறித்து ஆஞ்சநேயர் கோவில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படும் கடை வியாபாரி கடந்த 1.7.2019-ந் தேதி முதல் தற்போது வரை 2½ ஆண்டுகளாக கோவிலுக்கு வாடகை செலுத்த மறுத்தார். நியாய வாடகைக்குழு மாத வாடகையை ரூ.92,180 என நிர்ணயம் செய்து உள்ளது. வாடகை பாக்கி செலுத்த அறிவுறுத்தியும் செலுத்தவில்லை. இதனால் கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது என்றார்.

எச்சரிக்கை

இதற்கிடையில் மாரியம்மன் கோவில் கட்டிடத்தில் 11 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.42 லட்சம் வாடகை பாக்கி இருந்தது. அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வியாபாரிகள் வாடகையை செலுத்தி வருகின்றனர். தற்போது ரூ.8 லட்சம் பாக்கி உள்ளது. உரிய காலத்திற்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story