தேனி அல்லிநகரம் நகராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்கு ஆட்சேபனை பரிசீலனையில் பரபரப்பு


தேனி அல்லிநகரம் நகராட்சியில்  தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்கு ஆட்சேபனை  பரிசீலனையில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 7:57 PM IST (Updated: 5 Feb 2022 7:57 PM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் நகராட்சியில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்கு கடுமையான ஆட்சேபனை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடந்தது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு மொத்தம் 234 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. மனுக்கள் மீதான பரிசீலனை நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் 10-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ரேணுப்பிரியாவின் வேட்பு மனுவின் மீது அ.தி.மு.க.வினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அவர் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு தான் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அவருடைய பெயரை ஊராட்சியில் இருந்து நகராட்சியின் வாக்காளர் பட்டியலில் சேர்த்ததில் விதிமீறல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர். இருப்பினும் அந்த ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டு வேட்பு மனு ஏற்கப்பட்டது.
27-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கருணகாரன் தனது சொத்து விவரங்களை மறைத்து உள்ளதாகவும், வேட்பு மனுவில் நகராட்சியின் பெயர் தவறாக எழுதியதோடு, தனது குழந்தைகளின் விவரங்களை காட்டாமலும், மனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல் உள்ளதாகவும் தி.மு.க. வேட்பாளர் அய்யனார்பிரபு ஆட்சேபனை தெரிவித்தார். பின்னர் ஆட்சேபனை தொடர்பாக எழுத்துப் பூர்வமான மனுவையும் அளித்தார்.
ஆட்சேபனை
அதுபோல், 32-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தனது வேட்பு மனுவில் நகராட்சியின் பெயரை தவறாக எழுதி உள்ளதோடு, மனுவை தவறாக பூர்த்தி செய்தும், பல இ்டங்களில் பூர்த்தி செய்யாமல்  உள்ளதாலும் அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் செல்வம் ஆட்சேபனை தெரிவித்தார். இருப்பினும் 27, 32-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
அதுபோல், 20-வது தி.மு.க. வேட்பாளர் பாலமுருகன் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகவும் அவருடைய வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆட்சேபனை தெரிவித்தார். மேலும் அந்த வார்டுக்கான அ.தி.மு.க. வேட்பாளருக்கு உடல் நலம் சரி இல்லை என்றும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய இருப்பதால் அவரின் சார்பில், தான் அந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாவும் கூறினார். பின்னர் அதற்கான ஒரு முன்மொழிவு பத்திரத்தை காட்டினார். ஆனால், அதில் வேட்பாளரின் கையெழுத்து இல்லை என்பதால், தி.மு.க. வேட்பாளரின் மனு ஏற்கப்படுவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் அறிவித்தார்.
இதனால், அ.தி.மு.க.வினர் அங்கிருந்து வெளியேறினர். அலுவலகத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் அ.தி.மு.க.வினர் கூறுகையில், "ஆட்சேபனை மனுவை தேர்தல் அதிகாரி வாங்கவில்லை. இதனால், பதிவு தபால் மூலம் அனுப்பி வைப்போம்" என்றனர். அப்போது, உடல் நலம் சரியில்லை என்று கூறி பரிசீலனையில் பங்கேற்காத அ.தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் அங்கு வந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு 87 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு பரிசீலனை நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 82 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி 1-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் விமலா, 6-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் பழனித்தாய், 9-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் பஞ்சவர்ணம், 14-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் பாலசுப்பிரமணி, 18-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் அழகுராணி அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 
கூடலூர்
கூடலூர் நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 21 வார்டுகளுக்கு மொத்தம் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது இதில் 6-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் விஜயா தனது மனுவில் வரிசை எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் தவறுதலாக குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 15-வது வார்டில் பா.ஜ.க.வை சேர்ந்த சண்முகம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 8-வது வார்டுக்கு லட்சுமணன் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். இவருக்கு அதே வார்டில் உள்ளவர்கள் யாரும் முன்மொழியவில்லை. இதனால் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
பா.ஜ.க.சார்பில் மொத்தம் 6 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 2 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வார்டுகளுக்கு 73 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.





Next Story