மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் சாவு
மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கம்பம்:
கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கம்பம் கிராமச்சாவடி தெருவில் உள்ள சிவனடியார் அன்னதான அறக்கட்டளையில் தலைவராக உள்ளார். இவருடைய மகன் சிவப்பிரகாசம் (வயது 21) உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் அறக்கட்டளையின் ஆண்டு விழாவையொட்டி மாடியில் கொடிக்கம்பம் ஊன்றுவதற்காக நேற்று சிவப்பிரகாசம் மாடிப்படி வழியாக இரும்பினால் ஆன கொடிக்கம்பத்தை கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடி அருகே சென்ற மின் வயரில் கொடிக்கம்பம் உரசியது. இதில் கொடிக்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்து சிவப்பிரகாசம் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிவப்பிரகாசம் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிவப்பிரகாசம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story