தேசிய திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 356 பேர் எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில், 22 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 356 பேர் எழுதினர்.
திண்டுக்கல்:
பள்ளி மாணவ-மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்தி விடாமல் தொடரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில் மத்திய அரசு சார்பில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,250 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
மேலும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
இதையடுத்து தேசிய திறனாய்வு தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 5 ஆயிரத்து 497 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி 2 கட்டங்களாக மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்து 356 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் 141 பேர் தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story