காட்டு யானைகளை விரட்ட புதிய யுக்தி
தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட புதிய யுக்தியை வனத்துறையினர் கடைபிடித்துள்ளனர்.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே உள்ள ஆடலூர், தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, தடியன்குடிசை, பெரியூர், பள்ளத்துக்கால்வாய், கல்லக்கிணறு, கவியக்காடு, வெங்கலப்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு அப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, காபி, ஆரஞ்சு ஆகிய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் அங்குள்ள வீடுகளையும் யானைகள் சேதப்படுத்துகின்றன. தோட்டத்துக்கு செல்கிற விவசாயிகளை தாக்குகின்றன.
மலைக்கிராமங்களில் தொடர்ந்து அட்டகாசம் செய்கிற காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் புதிய யுக்தியை கடைபிடித்துள்ளனர். இதற்காக பிரத்யேக வாகனத்தை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் வனத்துறையினர் அலாரம் பொருத்தியுள்ளனர்.
கன்னிவாடி, தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம் ஆகிய 3 வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் அந்த வாகனம் மூலம் அலாரம் எழுப்பி யானைகளை விரட்டி வருகின்றனர்.
அதன்படி கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில், வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் ரமேஷ் பாபு, திலகராஜா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அலாரம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story