ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்


ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2022 9:00 PM IST (Updated: 5 Feb 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் சுயேச்சை வேட்பாளர் மனு தள்ளுபடி என கூறப்பட்டதால் நகராட்சி அலுவலகம் முன்பு ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி

ஆரணியில் சுயேச்சை வேட்பாளர் மனு தள்ளுபடி என கூறப்பட்டதால் நகராட்சி அலுவலகம் முன்பு ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வேட்புமனு பரிசீலனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன, 

இந்த வார்டுகளில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் சுயேச்சை உள்பட 198 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இப்பணியினை திருவண்ணாமலை மாவட்ட  தேர்தல் பார்வையாளர் சங்கீதா ஆய்வு செய்தார். அப்போது ஆரணி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான பி.தமிழ்ச்செல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவிச்சந்திரன், மேனகா, சரவணன், பொறியாளர் டி.ராஜவிஜய காமராஜ், அலுவலக மேலாளர் நெடுமாறன், ஆய்வாளர் மோகன் உள்பட அலுவலர்கள் பலரும் இருந்தனர். 

தள்ளுபடி

மாலையில் அனைத்து மனுக்களையும் முறையாக ஆய்வு மேற்கொண்டதில் 25-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் எல்.சேகர் என்பவர் 2 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. 

அதில் ஒரு வேட்புமனுவில் வேறு வார்டில் உள்ளவர்  முன்மொழிந்ததாலும் முறையாக படிவங்களை பூர்த்தி செய்யாததாலும் அவரது ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

மேலும் 1-வது வார்டில் சுயேச்சை வேட்பாளரான தங்கராசன் என்பவரின் மனுவில் படிவம் 3- ஏ. உறுதிமொழி ஆவணத்தில் சொத்து விவரம் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என கூறி தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

தர்ணா போராட்டம்

 இதனை அறிந்ததும் தங்கராசனின் ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் 1-வது வார்டில் இருந்து பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆரணி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து அதிகாரியிடம் கேள்வி கேட்டனர். 

அப்போது முழு விவரங்களை இன்னும் அறிவிப்பு பலகையில் ஒட்டவில்லை. ஒட்டிய பிறகு கேளுங்கள் என கூறி அவர்களை வெளியே அனுப்பினர்.

முழு விவரம் தெரியும் வரை நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என நகராட்சி வெளி வளாகத்தில் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 இதனால் ஆரணி நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் அறிவிப்பு பலகையில் இரவு 7.30 மணிக்கு வேட்பாளர்கள் விவரம் ஒட்டப்பட்டது. அதில் தங்கராசனின் பெயர் இருந்தது. அவரது மனு தள்ளுபடி செய்யவில்லை. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story