வனப்பகுதியில் இருந்து வழிதவறி குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகள்


வனப்பகுதியில் இருந்து வழிதவறி குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகள்
x
தினத்தந்தி 5 Feb 2022 9:21 PM IST (Updated: 5 Feb 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் இருந்து வழிதவறி குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகள்

தளி:
வனப்பகுதியில் இருந்து வழிதவறி குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகள் சாகுபடி பயிர்களை சேதப்படுத்துகிறது. 
இயற்கையின் கொடை
வானுயர்ந்த மலை, வானவில்லை தொடும் மரங்கள், ரம்யமான ஒலி எழுப்பி குதித்து ஓடும் சிற்றோைட, ஜில்லென்று தேகத்தை தழுவும் இதமான காற்று, வற்றாத ஜீவநதி, மண்வளம் இவை அனைத்தும் இயற்கையின் படைப்பே இந்த வனப்பு.  வளம் நிறைந்த வனப்பகுதியில் வாழ வனவிலங்களுக்கு  பிடிக்காமலா இருக்கும். காலில் கடிக்கும் அட்டை முதல் கார்மேக தேகம் கொண்ட யானை வரை அத்தனை உயிரினங்களுக்கும் வனம் ஜீவாதாரம். பசுமை நிறைந்த ஓடைகளுக்கு நடுவே வெள்ளைக்கீற்றாய் ஆறுகள், மயிலின் அகவல், யானையின் பிளிறல், பறவைகளின் கூக்குரல், மூலிகை மணம் நிரம்பிய காற்று, அதிசயத்தக்க உயிரினங்களின் இருப்பிடம் என மலைப்பகுதிகளை எண்ணிலடங்கா வார்த்தைகளால் வர்ணித்துக் கொண்டே செல்லலாம். இயற்கை அளித்த மிகப்பெரிய கொடையான வனப்பகுதியை ஆதாரமாகவும் இருப்பிடமாகவும் கொண்டு எண்ணற்ற உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை வனப்பகுதி அனுதினமும் அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆனாலும் பரந்து விரிந்த வனப்பகுதிக்குள் கோடைகாலத்தில் நுழையும் வெப்பம் என்ற அரக்கனால் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் திகழ்ந்து வந்த வனம் பொழிவை இழந்து விடுகிறது. அங்கு வசித்து வந்த யானை உள்ளிட்ட தாவர உண்ணிகள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அடிவாரப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கி விடுகிறது.
வெப்பத்தால் அழிவு
இதற்காக வனவிலங்குகள் குறுக்கு வழியை கண்டுபிடித்து ஆங்காங்கே தனக்கென வழித்தடங்களையும் உருவாக்கிக் கொள்கிறது. எப்போதெல்லாம் உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதே பாதையை பிடித்து அடிவாரப்பகுதிக்கு எளிதில் வந்தடையும்.அப்போது அந்தப் பாதை அழிக்கப்பட்டு இருந்தால் அவை வழி தவறி வயல்வெளிகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது வாடிக்கையாக உள்ளது. 
வனத்தை வளமையாக்கி இயற்கையை பேணி பாதுகாப்பதில் யானைகளின் பங்கு முக்கியமானதாகும். அவை வாழ்வதற்கு பரந்து விரிந்த காடுகள் தேவை. யானைகள் உணவுக்காக மரங்கள், செடிகள் உள்ளிட்டவற்றை அழித்துக்கொண்டு செல்லும். அவற்றை பின்தொடரும் மான், காட்டெருமை உள்ளிட்ட தாவர உண்ணிகள் உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்ளும்.
உணவு தேடும் முயற்சி
தாவர உண்ணிகளை பின்தொடர்ந்து வரும் மாமிச உண்ணிகள் இரையை வேட்டையாடி உணவைப் பூர்த்தி செய்து கொள்கிறது.வனப்பகுதியில் உணவுச் சங்கிலி தடைபடாமல் நடைபெறுவதற்கு யானைகள் முக்கிய காரணமாக உள்ளது. யானைகள் அடிவாரத்தில் உள்ள சூழல் மற்றும் உணவு பழக்கத்திற்கு வாழப் பழகிவிட்டால் அதை திருப்பி வனப்பகுதிக்குள் அனுப்புவது சவாலான விஷயமாகும்.ஏனென்றால் அடிவாரப் பகுதியில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்ட நெல், கரும்பு, தென்னை, சோளம், கம்பு உள்ளிட்டவை உணவுகளின் சுவைக்கு தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை, மான் மயங்கி விடுவது காரணமாகும்.நாவில் சுவை ஒட்டிக் கொள்வதால் யானைகள் அடிக்கடி அதே உணவை தேடிக் கொண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.அதே போன்றுதான் மாமிச உண்ணிகளும் அடர்ந்த வனப்பகுதியில் தாவர உண்ணிகளின் நடமாட்டம் குறைந்தால் மாமிச உண்ணிகளுக்கான உணவுத் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். இதனால் அவையும் வேறுவழியின்றி தனது இருப்பிடத்தை விட்டு இடம் பெயரும் சூழலுக்கு தள்ளப்படுகிறது.
வழிதவறும் வனவிலங்குகள்
அப்போது கண்ணில் தென்படுகின்ற இறையை துரத்திப் பிடிக்கும் எண்ணத்தில் ஓடி வருகின்ற மாமிச உண்ணியான சிறுத்தை வந்த வழியை மறந்து விடுகிறது. இதனால் அவை திரும்பிச்செல்ல முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஊருக்குள் வந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அதற்கு சான்றாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சின்னத்தம்பி யானை வழிதவறி பொள்ளாச்சியில் இருந்து உடுமலை பகுதிக்கு வந்து சுற்றித் திரிந்தது குறிப்பிடத்தக்கது. 
அதைத்தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானையை பிடித்து வளர்ப்பு யானையாக மாற்றினார்கள். அதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை ஒன்று திருப்பூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறையினர் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.
இடையூறு ஏற்படுத்தக்கூடாது
அதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் தோற்றுவிக்கப்பட்ட வழித்தடங்களில் இடையூறுகள் ஏற்படுத்துதல் கூடாது. பருவமழை காலங்களை ஆதாரமாகக் கொண்டு அதிகப்படியான மரக்கன்றுகளை வனப்பகுதிக்குள் நடவு செய்வதற்கு முன்வர வேண்டும்.
 வனவிலங்குகள் வயல்வெளிகள், ஊருக்குள் வந்து விடுவதை தவிர்ப்பதற்காக அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் அகழிகள் அமைக்கப்பட வேண்டும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை கடைபிடித்து வனத்தையும் வனம் சார்ந்த பகுதியை பசுமையாக வைத்துக்கொண்டால் வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வருவதை தவிர்த்து விடலாம்.

Next Story