அஞ்செட்டி அருகே யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 2 பேர் கைது
அஞ்செட்டி அருகே யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
யானை சுட்டுக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டம் அஞ்செட்டி வனச்சரகத்தில் கடந்த 2-ந் தேதி 16 முதல் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை ரோந்து சென்ற வன ஊழியர்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும் வன கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில் திடீர் திருப்பமாக யானையின் தலையில் உலோக குண்டு ஒன்று இருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் அந்த யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து யானையின் உடலில் இருந்த 2 தந்தங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.
2 பேர் கைது
தொடர்ந்து யானையை கொன்ற நபர்களை பிடிக்க வனத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தப்பன்பள்ளியை சேர்ந்த முத்து (வயது 35), ஏழுமலையான்தொட்டி காளியப்பன் (28) ஆகியோர் யானையை சுட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் முயல் வேட்டைக்காக வனப்பகுதிக்குள் சென்றதும், அப்போது யானை அவர்களை துரத்தியதால் அங்கிருந்து தப்பித்து செல்வதற்காக யானையை நாட்டுத்துப்பாக்கி மூலம் சுட்டதும் தெரியவந்தது. இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
மேலும் யானையை சுட பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, வெடி மருந்துகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story