விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 Feb 2022 10:53 PM IST (Updated: 5 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் மொத்தம் 210 பதவியிடங்களுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

இதையொட்டி 3 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள இ.எஸ். கலை அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முன்னேற்பாடு பணிகள்

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையும், வாக்கு எண்ணும் இடங்களில் தடுப்புக்கட்டை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த அறையை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் சுற்றிலும் வலை அடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, மருத்துவ குழுவினருடன் மருத்துவ அறைகளும் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. வாக்குகள் எண்ணும் இடம் மற்றும் அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி செய்வதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும்.

தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் இப்போதே தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணுவதற்கு ஏற்ப மையங்களை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அவ்வப்போது இப்பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story