திண்டிவனத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை


திண்டிவனத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2022 11:05 PM IST (Updated: 5 Feb 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மேம்பாலத்தின் கீழே பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் படுகாயமடைந்தார்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மேம்பாலத்தின் கீ்ழ்பகுதி தற்காலிக பஸ் நிலையமாக செயல்படுகிறது. இதில் ஒரு புறம் சென்னை செல்லும் பஸ்களும், மற்றொரு பகுதியில் புதுச்சேரி செல்லும் பஸ்களும், நடுப்பகுதியில் விழுப்புரம் செல்லும் பஸ்களும் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றன. 

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மேம்பாலத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். 

பெண் படுகாயம்

இதில் மேம்பாலத்தின் கீழே பஸ்களில் வருபவர்களுக்கு வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட பழவகைகளை விற்பனை செய்த மொளசூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மனைவி விமலா(வயது 40) என்பவரின் மீது விழுந்த அந்த வாலிபர், தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் விமலாவும் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
இதற்கிடையே இதுபற்றி அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

காரணம் என்ன?

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்?, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story