நாமக்கல் நகராட்சி 29-வது வார்டு தி.மு.க. வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
நாமக்கல் நகராட்சி 29-வது வார்டு தி.மு.க. வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி 29-வது வார்டு தி.மு.க. வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேட்புமனு பரிசீலனை
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்த 39 வார்டுகளிலும் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க. உள்பட 242 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 29-வது வார்டு பொது பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வார்டில் உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ராஜேஸ்வரி, அ.தி.மு.க. சார்பில் ரோஜா ரமணி, அவருக்கு மாற்று வேட்பாளராக முத்துலட்சுமி, அ.ம.மு.க. சார்பில் வேட்பாளராக மகேஸ்வரி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களின் வேட்புமனுக்கள் நேற்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவீந்திரன் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது அங்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார் மற்றும் அ.தி.மு.க.வினர் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ராஜேஸ்வரி டெபாசிட் தொகை ரூ.2 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.1,000 மட்டுமே செலுத்தி உள்ளார். எனவே அவர் டெபாசிட் தொகை செலுத்தியதற்கான ரசீதை காண்பிக்க வேண்டும். அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் சிவக்குமார், பூபதி, ராணா ஆனந்த் மற்றும் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். அவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தி.மு.க. வேட்பாளர் சரியான முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனவே அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது வெளியில் நின்று கொண்டு இருந்த தி.மு.க. நிர்வாகிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் இருந்த அ.தி.மு.க.வினர் வெளியே வர வேண்டும், இல்லையெனில் எங்களை அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இருதரப்பினரையும் சமரசம் செய்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரை அங்கிருந்து வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் இருதரப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். பின்னர் மாலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், 29-வது வார்டில் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ராஜேஸ்வரியின் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
Related Tags :
Next Story