வேட்புமனு பரிசீலனையில் 41 வேட்பாளர்களின் மனு தள்ளுபடி


வேட்புமனு பரிசீலனையில்                  41 வேட்பாளர்களின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 5 Feb 2022 11:29 PM IST (Updated: 5 Feb 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த வேட்பு மனுபரிசீலனையின் போது 41 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 4540 பேர் களத்தில் உள்ளனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த வேட்பு மனுபரிசீலனையின் போது 41 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 4540 பேர் களத்தில் உள்ளனர்.
4581 பேர் வேட்பு மனு
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
அதன்படி 979 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 384 பேரும், நகராட்சிகளுக்கு 460 பேரும், பேரூராட்சிகளுக்கு 3,737 பேரும் என மொத்தம் 4,581 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
41 மனுக்கள் தள்ளுபடி
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடந்தது. அங்கு காலை முதல் மாலை வரை பரபரப்புடன் காட்சி அளித்தது. வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும் போது ஏதும் பிரச்சினை நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பரிசீலனை முடிவில் நாகர்கோவில் மாநகராட்சியில் 8 வேட்பு மனுக்களும், நகராட்சிகளில் குளச்சல் நகராட்சில் ஒரு வேட்பு மனுவும், பத்மநாபபுரம் நகராட்சியில் 3 வேட்பு மனுக்களும்,        குழித்துறை   நகராட்சியில் 1 வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதேபோல் பேரூராட்சிகளில் 28 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்படி மொத்தம் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முறையாக மனு தாக்கல் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தற்போது 4,540 பேர் களத்தில் உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் நாளை (திங்கட்கிழமை) ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அப்போது தான் எத்தனை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றார்கள்? எத்தனை பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
அதை தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

Next Story