நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி செல்லும்போது டிரைவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணம் எவை?
வியாபாரிகள் விலைக்கு வாங்கிய நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி செல்லும் போது டிரைவர்கள் வைத்திருக்கவேண்டிய ஆவணம் குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விளக்கம் அளித்தனர்.
தஞ்சாவூர்:-
வியாபாரிகள் விலைக்கு வாங்கிய நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி செல்லும் போது டிரைவர்கள் வைத்திருக்கவேண்டிய ஆவணம் குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விளக்கம் அளித்தனர்.
வியாபாரிகள் வாங்கிய நெல்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், வெளி மாவட்டங்களில் விவசாயிகளிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பதாக புகாா்கள் அவ்வப்போது எழும்.
இதை தடுப்பதற்காக போலீஸ் துறையினா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் வாகன தணிக்கை, கிடங்குகளில் சோதனை என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடத்தும்போது அரவைக்காக வியாபாரிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் சில இடங்களில் நடக்கின்றன. இதைத் தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
ஆவணம்
அதன்படி நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்கள் இனிமேல் முழுமையான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆவணம் குறித்து தஞ்சை குட்செட் லாரி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் டிரைவர்களிடம் நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய், ஏட்டுகள் நிகிலா, மணிகண்டன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில் குட்செட் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜகுமார் மற்றும் நிர்வாகிகள், டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகளில் எடுத்து வரப்படும் நெல் மூட்டைகளுக்கு உரிய ரசீதை டிரைவர்கள் வைத்துள்ளனர். ஆனால் வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கும் நெல்லை கொண்டுவரும் லாரி டிரைவரிடம் உரிய ஆவணங்கள் இருப்பதில்லை.
இதனால் நெல்லை பறிமுதல் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை தவிர்க்க விண்ணப்பப்படிவம் டிரைவர்களிடம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி வியாபாரிகளிடம் இந்த படிவம் வழங்கப்படும்.
அதில் நெல்லை விற்பனை செய்த விவசாயி பெயர், அரிசி ஆலை உரிமையாளரின் பெயர், வியாபாரிகள் பெயர், முகவரி, ஜி.எஸ்.டி.எண், லாரியின் பதிவு எண், எந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பூர்த்தி செய்து டிரைவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
கவனம்
இந்தப்படிவங்களுடன் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நெல் மூட்டைகளை கொண்டு செல்லலாம். அப்படி படிவங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும். இதை வியாபாரிகளும், டிரைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story