விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 5 Feb 2022 11:53 PM IST (Updated: 5 Feb 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 5 நந்தி, 5 கோபுரங்கள், 5 தீர்த்தம், 5 பிரகாரம், 5 தேர்கள் என அனைத்தும் 5-ஆக  அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். 
கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 
இதற்கான விழா கடந்த 27-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2-ந்தேதி மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானை மீது வைத்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 3-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று 4-ம் கால யாகசாலை, 5-ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இன்று கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை, 5 மணிக்கு பரிகார யாகங்கள், பூர்ணாகுதி நடக்கிறது. அதனை தொடர்ந்து 7.15 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரங்கள், விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் 8.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. 
இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், 6 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தின்போது மலர் தூவுவதற்கு ஹெலிகாப்டர் மற்றும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க நீர் தெளிக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக விருத்தாசலம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து குவிந்துள்ளனர். 

பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்

கும்பாபிஷேக விழாவில் குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. 
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு தலைவரும், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளருமான அகர்சந்த், அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Next Story