ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் வேட்பு மனு பரிசீலனை:அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளிட்ட 3 பேரின் மனு நிராகரிப்பு


ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் வேட்பு மனு பரிசீலனை:அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளிட்ட 3 பேரின் மனு நிராகரிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 11:58 PM IST (Updated: 5 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனையின் போது 197 மனுக்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட 3 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது. தி.மு.க. வேட்பாளரான நகர் செயலாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வாகிறார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனையின் போது 197 மனுக்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட 3 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது. தி.மு.க. வேட்பாளரான நகர் செயலாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வாகிறார்.

வேட்பு மனு பரிசீலனை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது.இதனை தொடர்ந்து வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம், பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகளிலும், தொண்டி, மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், அபிராமம், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி ஆகிய 7 பேரூராட்சிகளிலும் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த தேர்தல் அலுவலர்கள் மூலம் நடைபெற்றது.
 ராமநாதபுரம் நகராட்சியில் ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான சந்திரா தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. இதனையொட்டி 33 வார்டுகளில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் என அனைவரும் வந்திருந்தனர்.

3 மனுக்கள் நிராகரிப்பு

 ஒவ்வொரு மனுக்களாக தனித்தனியாக எடுத்து சட்டவிதிகளின்படி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் வேட்புமனுத்தாக்கலின்போது பெறப்பட்டிருந்த 197 மனுக்களில் 194 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 3 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
 இதன்படி ராமநாதபுரம் நகரசபையில் 7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த சோமசுந்தரபாண்டியன் என்பவரின் வேட்புமனுவில் தெரிவித்தபடி வாக்காளர்கள் பட்டியலில் 7-வது வார்டில் அவரது பெயர் இல்லாமல் 8-வது வார்டில் இருந்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல, 10-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த சுப.நாகராஜன் என்பவரின் வேட்பு மனுவில் வாரிசுதாரர்களை குறிப்பிடுவதில் முதல் படிவம், 2-வது படிவத்தில் முரண்பாடு இருந்துள்ளது.இதற்கு தி.மு.க.வேட்பாளர் காளி ஆட்சேபனை தெரிவித்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, 21-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த ரவி என்பவரின் வேட்பு மனுவில் முன்மொழிபவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் வார்டு மாறி இருந்த காரணத்தினால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 194 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
போட்டியின்றி தேர்வாகிறார்

இதன்மூலம் 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் நகர் செயலாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வாக உள்ளார். ஏனெனில் அந்த வார்டில் அவரது மாற்று வேட்பாளரான அவரது தம்பி வினோத் கண்ணன் மட்டுமே உள்ளதால் அவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வார் என்றும் இதன்மூலம் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் ராமநாதபுரம் தி.மு.க. நகர் செயலாளர் பிரவீன்தங்கம் போட்டியின்றி தேர்வாக உள்ளது அந்த கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story