859 வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் தயார் செய்யும் பணி


859 வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் தயார் செய்யும் பணி
x
தினத்தந்தி 6 Feb 2022 12:15 AM IST (Updated: 6 Feb 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி தேர்தலையொட்டி 859 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் பணி நடந்து வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருச்சி, பிப்.6-
திருச்சி மாநகராட்சி தேர்தலையொட்டி 859 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் பணி நடந்து வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேர்தல் நடவடிக்கை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை மும்முரமாக நடந்தது. 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.சிவராசு தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கலைச்செல்வி மோகனும் முகாமிட்டு தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
வாக்குச்சாவடி பொருட்கள் ஆயத்தம்
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் 859 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு தேவையானபடிவங்கள், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் தயாரிக்கும் பணி நேற்று முதல் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. அதை மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மேற்பார்வையில் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
859 வாக்குச்சாவடிகள்
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் உள்ளாட்சி தேர்தல் பணியானது சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. மாநகராட்சியில் 859 வாக்குச்சாவடிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 7 லட்சத்து 74 ஆயிரத்து 515 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தேர்தலின்போது வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்புவதற்காக தயார் செய்து வரும் பணி நடந்து வருகிறது.மேலும் கொரோனா தடுப்பு உபகரணங்களும் பைகளில் உள்ளன" என்றனர்.

Next Story