நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளரும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை இயக்குனருமான விஜயேந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லலிதா முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-
123 வார்டு உறுப்பினர்கள்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் மயிலாடுதுறை காவேரி இல்லத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரிலோ அல்லது 9344450337 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பாக தகவல் அல்லது புகார்களை தெரிவிக்கலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி என 2 நகராட்சிகளும், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகளும் உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 72 ஆயிரத்து 846 ஆண் வாக்காளர்களும், 77 ஆயிரத்து 77 பெண் வாக்காளர்களும் மற்றும் 15 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 938 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சிகளில் 60 வார்டுகளும், பேரூராட்சிகளில் 63 வார்டுகளும் உள்ளன. எனவே 123 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
182 வாக்கு சாவடிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 182 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 71 மையங்களில் அமைந்துள்ளது. 182 வாக்குச்சாவடிகளில் 54 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட உள்ளது.
தேர்தலில் 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் மற்றும் 16 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணித்திட 14 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்
தேர்தலில் ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு 3 பறக்கும் படை குழு வீதம் ஒரு குழுவிற்கு 8 மணி நேரம் என சுழற்சி முறையில் 18 குழுக்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 182 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் வட்டார பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story