திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய லாரி- டிரைவர்-கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய லாரி- டிரைவர்-கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 6 Feb 2022 2:13 AM IST (Updated: 6 Feb 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் டிரைவர்-கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் டிரைவர்-கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். 
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும், இங்கிருந்து கர்நாடகாவுக்கும் செல்லும் முக்கிய பாதையாக இது இருப்பதால் திம்பம் மலைப்பாதையில் எப்போதும் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓய்வின்றி சென்று வந்தபடி இருக்கும். 
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடந்து விடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடக்க முடியாமல் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. 
அந்தரத்தில் தொங்கியது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு கிரானைட் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. சாம்ராஜ்நகரை சேர்ந்த சனமுல்லா (வயது 26) என்பவர் லாரியை ஓட்டினார். இர்பான் (31) என்பவர் கிளீனராக உடன் வந்தார்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவை இந்த லாரி கடந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது. ஆனால் பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில் லாரியின் முன்பக்கம் மோதியதால் மேற்கொண்டு உருண்டு விழாமல் லாரி அந்தரத்தில் தொங்கியது. உடனே டிரைவரும், கிளீனரும் கீழே குதித்து உயிர் தப்பினார்கள். ஆனாலும் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. 
விசாரணை
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பள்ளத்தில் இருந்து டிரைவரையும், கிளீனரையும் மீட்டு சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். மரத்தில் மோதாமல் இருந்திருந்ததால் லாரி சுமார் 500 அடி பள்ளத்தில் பாய்ந்து உருண்டிருக்கும். உயிர்ச்சேதமும் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அந்தரத்தில் தொங்கியதால் டிரைவரும், கிளீனரும் உயிர் தப்பினார்கள்.
 இதேபோல் சாலை ஓரத்தில் சம்பவம் நடந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. 
இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story