‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குழி மூடப்படுமா?
மொடக்குறிச்சி அருகே உள்ளது 46 புதூர் கிராமம். இங்குள்ள முனியப்பன் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு சாலையில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிவடைந்ததும் சரியாக ரோட்டில் உள்ள மண்ணை போட்டு குழியை மூடவில்லை. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், 46 புதூர் கிராமம்.
விபத்து ஏற்படும் வளைவு
கருமாண்டம்பாளையம் அடுத்துள்ள மலையம்பாளையத்தில் போலீஸ் நிலையம் அருகே ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் ஆபத்தான வளைவு உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வளைவு இருப்பதால் ஏற்கனவே விபத்து நடந்து பலமுறை உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மலையம்பாளையத்தில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
மாயவன், ஈரோடு.
வேகத்தடை வேண்டும்
ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து சவீதா சிக்னல் வரை செல்லும் ரோட்டில் பஸ், கார், லாரி என எப்போதும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். ஆனால் இந்த ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சவீதா சிக்னலில் இருந்து பஸ்நிலையம் வரை உள்ள ரோட்டில் தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், ஈரோடு.
படிக்கட்டில் பயணம்
தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் மாணவ-மாணவிகள் நாள்தோறும் பஸ்சில் வந்து செல்கிறார்கள். ஆனால் முறையான பஸ் வசதி இல்லாததால், இயக்கப்படும் ஒரு சில பஸ்களில் படிக்கட்டுகளில் உயிரை பணயம் வைத்து தொங்கியபடி செல்கிறார்கள். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி போக்குவரத்து துறை அதிகாரிகள் தாளவாடி மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும்.
மாதேஸ்வரா, தாளவாடி.
ஒளிராத மின்விளக்கு
வடமுகம் வெள்ளோடு ஊராட்சியில் மெயின்ரோட்டில் 40-ம் எண் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக ஒளிரவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் அந்த பகுதியில் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒளிராத மின்விளக்கை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
துரைசாமி, வடமுகம் வெள்ளோடு.
பழுதடைந்த படிக்கட்டு
அறச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்டுப்புதூரில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மேல் பகுதிக்கு செல்லும் படிக்கட்டு பழுதடைந்து பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் தொட்டியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களால் மேலே செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், சில்லாங்காட்டுப்புதூர்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
ஈரோடு சென்னிமலைரோடு சாஸ்திரிநகர் மேம்பாலத்துக்கு அருகில் முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பிரிவு ரோடு செல்கிறது. அங்கு வேகத்தடை இல்லாததால் முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சென்னிமலை ரோட்டில் வேகமாக வந்து திரும்புகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பிரிவுக்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், ஈரோடு.
Related Tags :
Next Story