விஸ்வரூபம் எடுக்கும் ஆடை கட்டுப்பாட்டு விவகாரம்; முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக இந்து மாணவிகள் பேரணி
உடுப்பியில் ஆடை கட்டுப்பாட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக இந்து மாணவிகள் பேரணி நடத்தினார். இதனால் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மங்களூரு:
பர்தாவிற்கு தடை விதித்த கல்லூரி
உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான முஸ்லிம் மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரி முதல்வர் தடுத்து நிறுத்தி பர்தா அணிந்து வரகூடாது என்று கூறினார். ஆனால் மாணவிகள் கேட்கவில்ைல. மாறாக கல்லூரி நுழைவாயில் முன்பே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளும் அதேபோல் மாணவிகள் பர்தா அணிந்து வந்தனர். அப்போதும் கல்லூரி முதல்வர் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனால் மாணவிகள் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குந்தாப்புரா மாணவிகளுக்கு ஆதரவாக ஏராளமான முஸ்லிம் மாணவிகள், அமைப்புகள் களத்தில் குதித்தன.
போராட்டம்
3-வது நாளும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பைந்தூர் மற்றும் பிற இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளிலும் இந்த ஆடை கட்டுப்பாட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. பெற்றோருடன் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்தபடி கல்லூரிக்கு சென்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் அவர்களை கண்டித்தது. பிரச்சினையை பெரிது படுத்தவேண்டாம். எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகள் என்று கூறினர். ஆனால் மாணவிகள் கேட்கவில்லை. பர்தா அணிந்துதான் வருவோம் என்றனர்.
அவர்களை கல்லூரி நிர்வாகம் நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த தகவல் இந்து மாணவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பேரணி
நேற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்ததால், அவர்களுக்கு போட்டியாக இந்து மாணவிகள் களம் இறங்கினர். சக மாணவர்களுடன் காவி துண்டு அணிந்து குந்தாப்புரா சாலையில் பேராணியாக வந்த மாணவிகள் ஜெய் ஸ்ரீராம், ஹர ஹர மகாதேவ் என்ற கோஷம் எழுப்பினர். இதேபோன்று அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் காவி துண்டு அணிந்து சென்றனர்.
இதனால் குந்தாப்புரா நகரமே ஸ்தம்பித்தது. மாணவிகளின் தீவிரத்தை பார்த்த கல்லூரி நிர்வாகம், அவர்களை உள்ளே நுழையவிடவில்லை. கல்லூரி முன்பு குவிந்த மாணவர்-மாணவிகள், கோஷங்களை எழுப்பி கொண்டே இருந்தனர்.
கல்லூரிக்கு விடுமுறை
மற்றொரு புறம் முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நுழைவாயிலை முற்றுகையிட்டு போராடினர். சில கல்லூரிகளில் பர்தா அணிந்து நுழைந்த மாணவிகளை பாதுகாப்பு கருதி கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. இதனால் சக மாணவிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதுகாப்பு அளித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி கூறினர். ஆனால் யாரும் கேட்கவில்லை. இதையடுத்து கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். போலீசாரின் ஆலோசனையை ஏற்ற கல்லூரி நிர்வாகம் 2-வது நாளாக கல்லூரிக்கு விடுமுறையை அறிவித்தது. இதையடுத்து சில மணி நேரம் கல்லூரியை சுற்றி வந்த மாணவர்கள் பின்னர் வீட்டிற்கு கலைந்து சென்றனர்.
போலீஸ் குவிப்பு
பர்தா விவகாரம் தொடர்பாக மாணவிகள் தொடுத்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறுகிறது. தொடர்ந்து உடுப்பி மாவட்டத்தில் பதற்றம் நிலவுவதால் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
==========
Related Tags :
Next Story